எம்.பி.பி.எஸ். #MedicalCounselling இன்று (ஆக.21) தொடங்குகிறது!
43,063 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், தமிழகத்தில் இன்று காலை எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
நேற்று முன் தினம் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் உட்பட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று ஆகஸ்ட் 21ம் தேதி தொடங்குகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் மருத்துவ படிப்புக்கு 43,063 பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டின் படி 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் 3,733 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளில் சேர 2,721 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 495 எம்.பி.பி.எஸ் இடங்களும், 125 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலில் நாமக்கல் மாணவர் ரஜினிஷ் முதலிடத்தையும், சென்னையை சேர்ந்த மாணவர் சையத் ஆரிபின் 2வது இடத்தையும், 3 வது இடத்தை சென்னை சைலஜாவும் பிடித்துள்ளனர். 4வது இடத்தை ஸ்ரீராம் என்கிற மாணவரும், 5வது இடத்தை ஜெயந்தி பூர்வதா என்ற மாணவியும் பிடித்துள்ளனர். அதே போல் தரவரிசை பட்டியலில் 6வது மற்றும் 7வது இடத்தை நாமக்கல் மாணவர்கள் ரோகித்தும், சபரீசனும் பிடித்துள்ளனர்.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளிகளுக்கான தரவரிசை பட்டியலில் 669 மதிப்பெண்கள் பெற்று மாணவி ரூபிகா முதலிடத்தையும், 668 மதிப்பெண்களுடன் சென்னை சைதாப்பேட்டை பள்ளியை சேர்ந்த காயத்ரி தேவி 2வது இடத்தையும், மூன்றாவது இடத்தை திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு மாணவி அனுஷியாவும் பிடித்துள்ளனர். 665 மதிப்பெண் பெற்ற நாமக்கல்லை சேர்ந்த மாணவர் ரத்தீஷ் 4 வது இடமும், திருவண்ணாமலை கலசபாக்கத்தை சேர்ந்த அன்பரசன் 5வது இடமும் பிடித்துள்ளனர். தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று ஆகஸ்ட் 21ம் தேதி தொடங்குகிறது.