உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி எப்போது? 'ஏமாற்றம் இருக்காது.. மாற்றம் இருக்கும்' - ஸ்டாலின் பதில்
தமிழக அமைச்சரவையில் மாற்றம் மற்றும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு, 'மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகனும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. தி.மு.க-விலும் மூத்த அமைச்சர்கள் சிலர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றுவரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) பார்வையிட்டார். கொளத்தூர் தொகுதியில் பல்வேறு புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவரிடம் அமைச்சரவை மாற்றம் மற்றும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 'அமைச்சரவையில் மாற்றம் இருக்கும். ஆனால் ஏமாற்றம் இருக்காது' என்று தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்பது குறித்து பதிலளித்த முதலமைச்சர், 'அவர்களுடைய வெள்ளை அறிக்கை எந்த அளவிற்கு இருந்தது என்பது தெரியும். அமைச்சர் ராஜா ஏற்கனவே தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார். அதுவே வெள்ளை அறிக்கைதான்' என தெரிவித்துள்ளார்.