உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் சஞ்சீவ் கண்ணா..
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ள நிலையில், நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய் சந்திரசூட்டின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை டி ஒய் சந்திரசூட் பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இன்று பதவியேற்க உள்ளார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, சஞ்சீவ் கண்ணாவிற்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். காலை 10 மணிக்கு இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். வரும் 2025 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி வரை சஞ்சீவ் கண்ணா பதவிக்காலம் இருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் சஞ்சீவ் கண்ணா டெல்லியில் 1960 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை தேவ்ராஜ் கண்ணா டெல்லி உயர் நீதிமன்றத்தில் 1985 ஆம் ஆண்டு நீதிபதியாக இருந்தவர். இவரது தாயார் சரோஜ் கண்ணா, இந்தி பேராசிரியராக டெல்லி ஸ்ரீராம் கல்லூரியில் பணி செய்தார். சஞ்சீவ் கண்ணா டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர்.
கடந்த 1983 ஆம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட சஞ்சீவ் கண்ணா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். நீண்ட காலம் வழக்கறிஞராக பணியாற்றிய சஞ்சீவ் கண்னா, கடந்த 2004 ஆம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராகவும் நியமனம் செய்யப்பட்டு இருந்தார். 2005 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், தான் தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு இருக்கிறர். வேறு எந்த ஒரு நீதிமன்றத்திலும் சஞ்சீவ் கண்ணா தலைமை நீதிபதி பொறுப்பை வகிக்கவில்லை. இதற்கு முன்பு ஒரு சில நீதிபதிகளே இப்படி வேறு எந்த நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்காமல் நேரடியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகியிருக்கிறார்கள்.