'இழப்பீடு கேட்கல விஜய்.. ஆறுதல் கூட சொல்ல முடியாதா'.. கொந்தளித்த தவெக நிர்வாகியின் உறவினர்கள்
தவெக மாநாடு நேற்று நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோர் அதில் கலந்து கொண்டனர்.
திருச்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் காரில் செல்லும்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர். இதற்கு விஜய் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்பதால், உறவினர்கள் கொந்தளித்துள்ளனர்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் விஜய் தன் கட்சியின் கொள்கை, கோட்பாடு, திட்டம் உள்ளிட்டவற்றை பகிர்ந்தார். தவெக கொள்கை பாடல் வெளியிடப்பட்டது.
பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்பதுதான் எங்களின் அடிப்படை கொள்கை. திருவள்ளூவர், காமராஜர், பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் எங்களின் வழிகாட்டிகள். கொள்கை ரீதியாக பாஜகவும், அரசியல் ரீதியாக திமுகவும் எங்கள் எதிரிகள். கூட்டணி கட்சிகளுடன் அதிகார பகிர்வு.
நான் எக்ஸ்ட்ரா லக்கேஜாக இருக்க வரவில்லை. ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறேன். இனி திரும்பி பார்க்க மாட்டேன். என் கேரியரின் உச்சத்தையும், ஊதியத்தையும் விட்டு வந்துள்ளேன். உங்களை மட்டுமே நம்பி வந்துள்ளேன். என்று பேசினார்.
விஜயின் கன்னி பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். திமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் விஜய் கருத்துடன் முரண்பட்டுள்ளன.
தவெக மாநாட்டில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. மாநாட்டுக்கு தொண்டர்கள், ரசிகர்கள் மிகவும் கவனத்துடன் பாதுகாப்பாக வந்து செல்ல வேண்டும் என்று விஜய் கடிதம் மூலம் வலியுறுத்தினார். இருந்தபோதும் அசாம்பாவிதங்கள் அரங்கேறின.
அதிகளவு கூட்டம் கூடியதால் தண்ணீர் பற்றாக்குறை நிலவியது. வெயிலும் வாட்டி வதைத்ததால் நூற்றுக்கும் மேற்பட்டோர் மயக்கம் போட்டு விழுந்தனர். தவெக மாநாட்டுக்காக சென்னையில் இருந்து பைக்கில் கிளம்பி வந்த வசந்த் என்ற இளைஞர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
மேலும் திருச்சி மாவட்டத்தில் இருந்து இளைஞரணியைச் சேர்ந்த சீனிவாசன், கலை ஆகியோர் மாநாட்டுக்காக காரில் புறப்பட்டு சென்றனர். அப்போது சாலையில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில் இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 2 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் நேற்றைய தினம் நடைபெற்ற மாநாட்டிலோ அல்லது அறிக்கை மூலம் கூட விஜய் அவர்களுக்காக இரங்கல் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து சீனிவாசனின் உறவினர்கள் கூறுகையில், உயிரே பறிபோகியும் கட்சி தலைமையில் இருந்து யாரும் வரவில்லை. அறிக்கை கூட விடவில்லை. நானும் விஜய் ரசிகன் தான். மேடையில் ஏறியபோது சிறிய வருத்தம் தெரிவித்திருக்கலாம். இப்போதே இப்படி, இவரெல்லாம் முதலமைச்சரானால் எப்படி இருக்கும்.
இவ்வளவு நாள் உழைத்து என்ன பயன். தலைமையில் இருந்து ஒரு போன், மெசேஜ் கூட வரவில்லை. நாங்கள் இழப்பீடு எல்லாம் கேட்கவில்லை. ஒரு ஆறுதல் தான் எதிர்பார்க்கிறோம். ஒரு தொண்டனுக்காக விஜய் இதைக் கூட செய்ய மாட்டாரா. சாதாரண நபர்களிடம் கூட இந்த செய்தி சேர்ந்துள்ளது.
விஜய்க்கு இந்த செய்தி சேரவில்லையா. அவரிடம் ஒரு ஆண்ட்ராய்ட் போன் கூட இல்லையா. அவர் வரவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. சீனிவாசன் எம்எல்ஏ வேட்பாளராக வந்திருக்க வேண்டியவர். அவரின் மறைவுக்கு கூட விஜய் ஆறுதல் தெரிவிக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்றனர்.