இன்று சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் | பாதுகாப்பு பணியில் 16,500 போலீசார் குவிப்பு | 17 பிரத்யேக வழித்தடங்கள் ஏற்பாடு!v
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா பூஜைகள், கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ள நிலையில், பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் விஜர்னம் செய்யப்பட்டு வரப்படுகின்றன.
தமிழகத்திலும் பல மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் விஜர்னம் செய்யப்பட்டு வரப்படும் நிலையில், சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடற்கரையில் கரைக்கப்பட உள்ளன.
சென்னையில், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்ல 3 நாட்கள் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். சென்னையில் இந்து அமைப்புக்கள் சார்பில் 1,500 பெரிய விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னையில் இன்று செப்டம்பர் 11ம் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறுகிறது. இதற்காக சென்னையில், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பாதுகாப்புப் பணியில் 16,500 போலீசார் ஈடுபட உள்ளனர். அதே போன்று வரும் செப்டம்பர் 14ம் தேதி மற்றும் 15ம் தேதியும் சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.