இன்று அமெரிக்க அதிபர் தேர்தல் : முக்கிய மாகாணங்களில் டிரம்ப் முன்னிலை!
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவ.-5) மாலை (இந்திய நேரப்படி) நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்புக்கும், கமலா ஹாரிஸுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இதெல்லாம் கடந்து யார் அந்த அதிபர் நாற்காலியில் அமரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் உருவாகி இருக்கிறது.
அதிபர் தேர்தல் :
இன்று மாலை 5.30 மணி முதல் (இந்திய நேரப்படி) தேர்தலானது தொடங்கி நாளை அதிகாலை 5.30 மணி வரையில் தேர்தல் நடைபெறுகிறது. அமெரிக்க நேரப்படி சொன்னால் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும்.
மேலும், அமெரிக்காவைப் பொறுத்த வரையில் இன்று இரவு அல்லது நாளை அதிகாலைக்குள் தேர்தல் முடிவுகள் தெரிந்து விடும். அதே போலத் தேர்தல் முடிந்த உடனேயே வாக்குகளும் எண்ணப்படும். இதனால், நாளை அதிகாலைக்குள் யார் அடுத்த அமெரிக்க அதிபர் என்று ஓரளவுக்குத் தெரிந்து விடும்.
முக்கியமான மாகாணங்களில் டிரம்ப் முன்னிலை :
இதுவரை, நடைபெற்ற கருத்துக் கணிப்பில் ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸுக்கு ஆதரவு பெருகி வந்தது. ஆனால், நேற்று அமெரிக்காவில் முக்கியமான ஒரு 7 மாகாணங்களில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்ப்க்கு ஆதரவு பெருகி இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
அதன்படி, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வடக்கு கரோலினா,பென்சில்வேனியா, விஸ்கன்சின் என 7 முக்கிய மாகாணங்கள் தான் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் முக்கிய மாகாணங்கள் ஆகும். இதில், ஒரு சில இடங்களில் இரு கட்சிகளுக்கும் சாதகமில்லாத மாகாணங்களும் இருக்கின்றன.
ஆனால் ஒரு சில இடங்களில் டிரம்ப்புக்கு ஆதரவு பெருகி இருப்பதாகவும், கமலா ஹாரிஸ்க்கு ஆறுதல் சற்று பின்னடைவாக உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இதனால், இந்த முக்கிய இடங்களில் இருவருக்கும் இடையேயான போட்டி மிகக்கடுமையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.