இன்னும் சில தினங்களில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிச்சயம் அமுலுக்கு வரும் : அமித் ஷா உறுதி..!
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா , "குடியுரிமை திருத்தச் சட்டத்தின் புதிய விதிகள் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அமல்படுத்தப்படும்.
இந்தச் சட்டம் நாட்டுக்கானது. இதனை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. அதேபோல், பொது சிவில் சட்டத்தை மதத்தோடு தொடர்புபடுத்துவது துரதிருஷ்டவசமானது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது பாஜகவின் திட்டம் மட்டுமல்ல; அரசியல் சாசன அவையின் திட்டமும்கூட. எனவேதான், அரசியல் சாசனத்தின் பிரிவு 44ல் பொது சிவில் சட்டம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாங்கள் அதிகாரத்துக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று 1950-ல் இருந்து நாங்கள் கூறி வருகிறோம்.
1950-ல் இருந்து பொது சிவில் சட்டம் எங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று வருகிறது. ஒரு நாடு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால், அதன் சட்டங்களும் மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும். மதத்தின் அடிப்படையிலான தனிச்சட்டங்கள் மதச்சார்பற்றத் தன்மையை நமக்கு ஒருபோதும் வழங்காது.
நமது நாட்டில் ஊழல் செய்தவர்கள் எல்லாம் தற்போது தலைமறைவாக இருக்கிறார்கள். குஜராத் முதல்வராக செயல்படத் தொடங்கியதில் இருந்து கடந்த 23 ஆண்டுகளாக நரேந்திர மோடி பதவியில் இருக்கிறார். இந்த 23 ஆண்டுகளில் அவர் மீது ஒரு சிறிய குற்றச்சாட்டுகூட எழவில்லை. எதிர்க்கட்சிகள்கூட அவர் மீது குற்றம் சுமத்த முடியாது. அந்த அளவிற்கு அவர் வெளிப்படைத்தன்மையுடன் பணிபுரிகிறார்.
மேற்கு வங்கத்தில் உள்ள அரசு ஊழல் அரசு. மதத்தின் அடிப்படையில், தாஜா செய்வதன் அடிப்படையில் அது மற்றவர்களுக்கு எதிராக அநீதி இழைக்கிறது. நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். எனவேதான், மேற்கு வங்கத்தில் மாற்றம் ஏற்பட போராடி வருகிறோம். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இயங்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகளை மேற்கு வங்க மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.
மேற்கு வங்கத்தில் பிரச்சினை பெரிதாக இருக்கிறது. அங்கும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. கடந்த தேர்தலில் நாங்கள் மேற்கு வங்கத்தில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இம்முறை, 25 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெறுவோம். ஏற்கெனவே எங்களுக்கு 2 எம்எல்ஏக்கள்தான் இருந்தார்கள். அந்த எண்ணிக்கை தற்போது 77 ஆக உயர்ந்துள்ளது.
மேற்கு வங்கம் எல்லையில் உள்ள ஒரு மாநிலம். மேற்கு வங்கத்தில் ஊடுருவல் பிரச்சினை மிகப் பெரியதாக இருக்கிறது என்பதை நாம் அனைவருமே அறிவோம். ஆதாரங்களின் அடிப்படையில் நான் சொல்கிறேன். மேற்கு வங்கத்தில் நடக்கும் ஊடுருவல் அரசாங்கத்தின் ஆதரவோடு நடக்கக்கூடியது. வாக்கு வங்கிக்காகவும், அரசியல் ஆதாயத்துக்காகவும் நடைபெறும் இத்தகைய நிகழ்வுகளால் நாட்டின் பாதுகாப்பு நெருக்கடிக்கு உள்ளாகிறது" என்று அமித் ஷா கூறினார்.