"இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் எனக்கான இடத்தை பிடிக்க விரும்புகிறேன்" - சூர்யகுமார் யாதவ்!
இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் தனக்கான இடத்தை பிடிக்க விரும்புவதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணி இலங்கையை அதன் சொந்த மண்ணில் வென்றது. அதன்மூலம் அவரது கேப்டன்ஷிப் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். டி20 கிரிக்கெட்டை பொறுத்த வரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் சூர்யகுமார் யாதவ்.
ஆனால் ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்பட தவறினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டிக்கு பிறகு சூர்யகுமாருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் அவர் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் தனக்கான இடத்தை பிடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்ததாவது, 'இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் எனக்கான இடத்தை பிடிக்க விரும்புகிறேன். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானேன். பின்னர் காயம் காரணமாக அணியில் என்னால் இடம்பெற முடியவில்லை. வீரர்கள் பலரும் அவர்களுக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட்டுகின்றனர். டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பதை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். 10 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன.
நான் எப்போதும் சிவப்பு பந்து போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். ஆரம்பத்தில் மும்பையில் அதிக அளவிலான சிவப்பு பந்து போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அந்த காலத்திலிருந்தே டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற ஆசை தொற்றிக் கொண்டது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிக அளவிலான முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளேன். தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை விரும்புகிறேன்' என்றார்.