ஆமா, நான் பைபிள் வாசிக்கிறேன்.. திருப்பதி பயணம் திடீர் ரத்து ஏன்? ஜெகன்மோகன் தந்த பரபரப்பு விளக்கம்
லட்டு சர்ச்சைக்கு நடுவே திருப்பதி கோவில் செல்லும் பயணத்தை ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திடீரென்று இன்று ரத்து செய்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றி அவர் விளக்கம் அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. இதில் ஆளும் கட்சியான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தோல்வியடைந்தது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் ஜனசேனா மற்றும் பாஜக அங்கம் வகித்தது.
இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வரானார். ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் துணை முதல்வரானார். இதையடுத்து சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பை கலந்து ஜெகன்மோகன் ரெட்டி கலந்து புனிதத்தை கெடுத்துவிட்டதாக தெரிவித்தார்.
மேலும் லட்டுவில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றி கொழுப்பு உள்ளிட்டவை இருக்கலாம் என்று கூறும் ஆய்வக அறிக்கையையும் தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. இது சர்ச்சையை கிளப்பியது. கோவிலின் பரிகார பூஜை, வாஸ்து ஹோமம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ஜெகன்மோகன் ரெட்டி முற்றிலுமாக மறுத்தார். லட்டு பிரசாதத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில் போலியான தகவல்களை சந்திரபாபு நாயுடு பரப்புகிறார்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தைப் போக்க ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் ஆகஸ்ட் 28ம் தேதி சிறப்பு பூஜை நடத்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார். மேலும் ஜெகன்மோகன் ரெட்டியும் திருப்பதி கோவில் செல்ல முடிவு செய்தார். இந்த பயணத்தை அவர் இன்று மேற்கொண்டு நாளை கோவிலில் வழிபட இருந்தார். இருந்த நிலையில் கடைசி நேரத்தில் திடீரென்று ரத்து செய்தார் ஜெகன் மோகன் ரெட்டி.
ஜெகன்மோகன் ரெட்டி கிறிஸ்தவர் என்பதால் திருப்பதி கோவிலில் இறை படிவத்தில் அவர் கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில் இந்த பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் தான் திருப்பதி பயணம் ரத்து செய்தது பற்றி ஜெகன்மோகன் ரெட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அரசு மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாவது:
முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகனும், அமைச்சருமான நாரா லோகேஷின் உத்தரவுப்படி மாநில போலீசார் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரை கோவிலுக்கு செல்ல விடாமல் தடுக்கின்றனர். கோவிலுக்கு செல்ல அனுமதி மறுத்து நோட்டீஸ் வழங்கி உள்ளனர். அதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கோவிலுக்கு செல்ல அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு செல்ல நாங்கள் ஏன் போலீசின் அனுமதியை பெற வேண்டும்?.
மாநிலத்தில் பேய் ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சி திருப்பதி கோவிலுக்கு நான் செல்வதை தடுக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்களை ஆளும் கட்சி மிரட்டுகிறது. எங்களை தடுக்கும் அதேவேளையில் பாஜகவினர் கோவிலில் குவிந்து வருகின்றனர். பல இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கான காரணம் எனக்கு தெரியாது. சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி திருப்பதி கோவிலின் புனிதத்தன்மையையும், பெருமையையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. லட்டு விஷயத்தில் அப்பட்டமாக சந்திரபாபு நாயுடு பொய் சொல்லி இருக்கிறார்.
நான் முதலமைச்சராகும் முன்பு ஏழுமலையானை வழிபட்ட பின்னரே பாத யாத்திரையை தொடங்கினேன். என்னுடைய மதம் என்னவென்று கேட்கிறார்கள். என்னுடைய மதம் மனிதாபிமானம், அதை டிக்ளரேஷன் படிவத்தில் எழுதி கொள்ளுங்கள். இறைவனை சந்தித்து வழிபட கூட இந்த ஆட்சி தடை விதிக்க முயற்சிக்கிறது. எனது தந்தை முதல்வராக இருந்தபோது 5 முறை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார். நானும் முதல்வராக இருந்தபோது 5 முறை ஏழுமலையானுக்கு 5 முறை பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தேன்.
நான் வீட்டில் பைபிள் வாசிக்கிறேன். அதேவேளையில் இந்து, முஸ்லிம், சீக்கியம் என அனைத்து மதத்தினரையும் நான் மதிக்கிறேன். முதல்வராக இருந்த ஒருவரையே கோவிலுக்கு அனுமதிக்க மறுத்தால் தலித்களை எவ்வாறு நடத்துவார்கள்?'' என ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பி உள்ளார்.