ஆகஸ்ட் 15 முதல் 17ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவித்ர உற்சவம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஏராளமான சிறப்பு பூஜைகள், உற்சவங்கள், தரிசனங்கள் நடைபெற்று வருகிறது.
அதன்படி ஆண்டுதோறும் பவித்ர உற்சவம் நடைபெறு வழக்கம். இந்தாண்டு பவித்ர உற்சவம் வரும் 15ம்தேதி தொடங்கி 17ம்தேதி வரை 3நாட்கள் நடைபெற உள்ளது. அதன்படி 3 நாட்களும் கோயில் சம்பங்கி பிரகாரத்தில் காலை 9 மணி முதல் 11 மணி வரை திருமஞ்சனமும், கோயிலின் நான்கு மாட வீதிகளில் மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் தேவி, பூதேவியுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
15ம்தேதி பவித்ர மாலைகள் பிரதிஷ்டை, 16ம்தேதி பவித்ர மாலைகள் சமர்ப்பணம், 17ம்தேதி யாகம் பூர்ணாஹூதியுடன் நிறைவு பெறும். இதனையொட்டி 14ம்தேதி அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது. பவித்ர உற்சவத்தையொட்டி வரும் 14ம்தேதி சகஸ்ர தீப அலங்கர சேவையையும், 15ம்தேதி திருப்பாவாடை சேவை, 15ம்தேதி முதல் 17ம் தேதி வரை கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.