dark_mode
Image
  • Friday, 29 November 2024

"அரசியல் மாற்றத்துக்கு அச்சாரமாகவே ஆர்ப்பாட்டம் அமைய வேண்டும்" - பாஜகவினருக்கு அண்ணாமலை அழைப்பு

'கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் சனிக்கிழமை நடைபெறும் ஆர்ப்பாட்டம் மிகப் பெரிய அளவில் இருக்க வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டம் அரசியல் மாற்றத்துக்கு மிகப் பெரிய அச்சாரமாக அமைய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு நடைபெறும் முதல் ஆர்ப்பாட்டம் என்பதால் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும்' என்று பாஜகவினருக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் சனிக்கிழமை பாஜக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகளுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகன் ஆகியோர் இன்று (ஜூன் 21) வாய்ஸ் கான்ப்ரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினர்.அதில் அண்ணாமலை பேசியது: 'கள்ளச் சாராய சாவு என்பது அரசை முழுமையாக மாற்றும் விஷயமாகும். இந்தியாவில் பல மாநில அரசுகள் கள்ளச் சாராய சாவு காரணமாக கவிழ்ந்துள்ளது.

கள்ளச் சாராய சாவுகளை மக்கள் ஏற்கமாட்டார்கள். ஓர் அரசின் தலையாய கடமை மனிதன் உயிருக்கு உத்தரவாதம் கொடுப்பதாக இருக்க வேண்டும்.தமிழக அரசு ஒருபுறம் டாஸ்மாக் கடைகளை நடத்துகிறது. மற்றொரு புறம் கள்ளச் சாரய விற்பனையை வேடிக்கை பார்க்கிறது. அதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கின்றனர். தமிழகத்தில் கடைசியாக 2006 - 2011 திமுக ஆட்சியில் கள்ளச் சாராய சாவுகள் நடைபெற்றது. அடுத்து இந்த ஆட்சியில் கடந்தாண்டு மரக்காணத்தில் கள்ளச் சாராய சாவு நடைபெற்றது. தற்போது கள்ளக்குறிச்சியில் நடைபெற்றுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய விற்பனை, நகர்பகுதியில் நடைபெற்றுள்ளது. நீதிமன்றம், காவல் நிலையம் அருகே நடைபெற்றுள்ளது. கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களை சபிக்கக் கூடாது. சாவுக்கு, குடித்தவர்கள் காரணம் அல்ல. குடிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த அரசு தான் காரணம். திமுக ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால், அவர்களே சாராய ஆலைகளை நடத்துகிறார்கள்.

டாஸ்மாக் நடத்துகிறார்கள். கள்ளச் சாராயத்தையும் அனுமதிக்கிறார்கள். கள்ளக்குறிச்சிக்கு இதுவரை முதல்வர் நேரில் செல்லவில்லை. இதிலிருந்து முதல்வரின் அக்கறை தெரிகிறது. ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட வேண்டும். மக்களின் கவனத்தை ஈர்க்க ஒப்பாரி வைப்பது, ஒருவரை பாடையில் படுக்க வைப்பது போன்றவற்றைச் செய்ய வேண்டும். இவை மிகவும் முக்கியம். இந்த ஆர்ப்பாட்டம் அரசியல் மாற்றத்துக்கு மிகப் பெரிய அச்சாரமாக அமைய வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடைபெறும் முதல் ஆர்ப்பாட்டம் என்பதால் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும்' என்று அவர் பேசினார்.

முன்னதாக கேசவவிநாயகன் பேசுகையில், 'கள்ளக்குறிச்சியில் மிகப்பெரிய கொடூரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. கள்ளச் சாராயத்துக்கு 50-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். 150-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் உள்ளனர். அவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (ஜூன் 22) பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதில் பெண்கள், குழந்தைகள் அதிகளவில் பங்கேற்க வேண்டும்.

போதையால் ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆர்ப்பாட்டங்களில் அதிகமான ஆட்கள் பங்கேற்க வேண்டும்.ஆர்ப்பாட்டத்தை தடுக்க அரசு என்ன நடவடிக்கையும் எடுக்கலாம். அனுமதி தர மறுக்கலாம். கைது செய்வோம் என மிரட்டலாம். அந்த அச்சுறுத்தலை கவனத்தில் கொள்ளாமல் ஆர்ப்பாட்டத்தில் அதிகளவில் பங்கேற்க வேண்டும்' என்றார்.

comment / reply_from

related_post

newsletter

newsletter_description