dark_mode
Image
  • Friday, 29 November 2024

அதானிக்கு இணையாக ஏழைகளும் வரி செலுத்தும் நிலை! -ராகுல் விமர்சனம்

அதானிக்கு இணையாக ஏழைகளும் வரி செலுத்தும் நிலை! -ராகுல் விமர்சனம்

நாட்டின் வரி முறை ஏழைகளிடமிருந்து கொள்ளையடிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் தான்பாத்தில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "இந்திய வரி அமைப்பு ஏழைகளிடமிருந்து கொள்ளையடிப்பதாக அமைந்துள்ளது. உங்களுக்கு இணையாக அதானியும் வரி செலுத்துகிறார்(அதானிக்கு இணையாக ஏழை மக்களும் வரி செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்). ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான தாராவி நிலம், அதானிக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, கடல் விமானங்களில் செல்கிறார். கடலுக்கடியிலும் சுற்றுப்பயணம் செல்கிறார். ஆனால், ஏழைகளும் பெண்களும் விலைவாசி உயர்வால் ஏற்படும் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.

உண்மை என்னவென்றால், இந்தியாவில் பெண்களும் இளைஞர்களும் மகிழ்ச்சியாக இல்லை. மோடி அவர்கள் பெரியளவில் உரையாற்றுவதை மட்டுமே காண முடிகிறது. ஆனால், அவர் எதுவும் செய்வதில்லை. விலைவாசி உயரும்போது, நம் அன்னைமார்களும், சகோதரிமார்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

நரேந்திர மோடி எல்லாவற்றிலும் ஜிஎஸ்டியை சேர்த்துள்ளார். ஒட்டுமொத்த வரி முறை, நாட்டின் ஏழை மக்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்க ஒரு வழியாக அமைந்துள்ளது. ஏழைகளிடமிருந்து கொள்ளையடிப்பதற்கானதொரு அமைப்புதான் ஜிஎஸ்டி

ஏழைகளில் பாதிக்குப் பாதி பேர், அதாவது 50 சதவிகிதத்தினர் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், 8 சதவிகிதத்தினர் பழங்குடியினர், 15 சதவிகிதத்தினர் தலித்கள், 15 சதவிகிதத்தினர் சிறுபான்மையினர். இந்த நிலையில், பிரதமர் ஒருபோதும் தலித் அல்லது பழங்குடியின மக்களை சந்திப்பதில்லை. ஆனால் தொழிலதிபர்கள் குடும்பத்தினரின் திருமணங்களில் கலந்துகொள்கிறார்.

உங்களை நாங்கள்(காங்கிரஸ்) 'பழங்குடியினர்' என்கிறோம். ஆனால் பாஜக 'காட்டுவாசிகள்' என அழைக்கிறது. பழங்குடியினர் என்றால் நாட்டின் முதல் உரிமையாளர்கள் என்று பொருள்படும். ஆனால் காட்டுவாசி என்பது உங்களுக்கு இந்நாட்டில் எவ்வித உரிமையுமில்லை என்பதையே குறிக்கிறது. அவர்கள் உங்களிடமிருந்து வனப்பகுதிகளை மெல்ல அபகரித்து வருகின்றனர்.

ஆனால் தண்ணீர், காடு, நிலம் ஆகியவற்றில் உங்களுக்குத்தான் முதல் உரிமை வழங்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதன் பலன்களை நீங்கள் பெற வேண்டும்.

முதலீட்டாளர்களுக்கு சலுகையளித்து பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ள கடன் தொகைக்கு இணையாக ஏழைகளுக்கு நாங்கள் நிதியளிப்போம்.

சாதி வாரிக் கணக்கெடுப்பை இந்த நாடாளுமன்றத்தில் விரைவில் கொண்டுவருவோம். அதன்மூலம், 50 சதவிகித இட ஒதுக்கீட்டை தகர்த்தெறிவோம்.

ஜார்க்கண்ட்டில், பழங்குடியினருக்கு 28 சதவிகிதம், தலித்களுக்கு 12 சதவிகிதம், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்" என்றார்.

அதானிக்கு இணையாக ஏழைகளும் வரி செலுத்தும் நிலை! -ராகுல் விமர்சனம்

comment / reply_from

related_post

newsletter

newsletter_description